Call Our Toll-Free Number: 123-444-5555

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர் உயிரைக் காக்கும் அமெரிக்க முயற்சி முறியடிப்பு


கொழும்பு, செப்.7: இலங்கைஉள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்காவின் இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக   விக்கிலீக்ஸ் பரபரபப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடுநிலையாளர் ஒருவரை  இலங்கை அரசு ஏற்கும்படி செய்வதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
2009 மே 17ம் நாள் இலங்கைக்கான  அப்போதைய அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை நிலைமை தொடர்பாக அனுப்பப்பட்ட கேபிளில், மே 17ம் நாள் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச போர் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளதாகவும், இலங்கைஅதிபர் மகிந்த ராஜபக்ச அதனை மே 19ம் நாள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அன்றைய நாள் முழுவதும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம உள்ளிட்ட இலங்கை அதிகாரிகளுடன் தான் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வளையத்துக்குள் அதிக எண்ணிக்கையான மக்கள் இன்னமும் இருப்பதாக மன்னார் கத்தோலிக்க ஆயர் தன்னிடம் தொடர்பு கொண்டு கூறியதாகவும், பிளேக்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் எஞ்சியுள்ள புலிகள் சரணடையத் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதாக நர்வே தூதர் தன்னிடம் கூறியதாகவும் பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான நடுநிலையாளர் ஒருவரை ஏற்க வைப்பது தொடர்பாகவே தான் இலங்கை அதிகாரிகளுடன் அன்றைய நாள் முழுவதும் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
மே 17ம் நாள் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை நடுநிலையாளராக ஏற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு ஏற்பாடு செய்ய முன்வருமாறு கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் போர் முடிந்து விட்டது என்று கூறி கோத்தபாய ராஜபக்ச அந்த நடுநிலை முயற்சியை ஏற்க மறுத்து விட்டதாகவும், ஆனால் சரணடையும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு படையினருக்கு தான் அறுவுறுத்தியிருப்பதாக அவர் கூறியதாகவும் பிளேக் அனுப்பிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை அன்றையநாள் போர் வளையத்துக்குள் இருந்து சடலங்களையும். காயமடைந்தவர்களையும் மீட்க அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை அனுமதிக்குமாறு இலங்கை அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவை தான் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வேண்டுகோளை நிராகரித்த பசில் ராஜபக்ச,இலங்கை அரசாங்கமே அதனைப் பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments:

About

Contact Details